முழு ஊரடங்கு டெல்லிக்கு அமல்? எப்போ தெரியுமா?

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை எனக் கூறினார்.

தற்போதைய நிலவரப்படி, 5 ஆயிரம் படுக்கைகள் கூடுதலாக உள்ளதாகவும், ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அதிகப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். நான்காம் கட்ட கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து அரசு போராடி வருவதாகக் கூறிய கெஜ்ரிவால், நோய் தொற்றை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, வாரத்தில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்படும், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவை மூட வேண்டும், திரையரங்குகள் 30 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஊரடங்கு நாட்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு அரசின் பாஸ் வழங்கப்படும் என்றும் ஒரு நாளில் ஒரு மண்டலத்தில் மட்டுமே சந்தைகள் செயல்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

Exit mobile version