கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக அறிவிக்க கோரி வழக்கு

கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக அறிவிக்க வலியுறுத்தி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில் 27 வது மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நாட்டில் 18 மாநிலங்களில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிகபட்சமாக குஜராத்தில் 2 ஆயிரத்து 165 பேருக்கும் மகாராஷ்ட்ராவில் ஆயிரத்து 188 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 556 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் என்றும் அதே நேரம் கொரோனாவுக்கு ஆட்படாத 875 பேரையும் கருப்பு பூஞ்சை தாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறிய அவர், இது ஒரு நல்ல அறிகுறி என்றார்.

கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்று என அறிவிக்க கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஏற்பட்டவர்களுக்கு அதன் தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட பல மா நிலங்கள் இதனை பெருந்தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது. இந்நிலையில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் பொது நலமனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version