16 வயது சிறுமியைக் காதலித்து கர்ப்பமாக்கியதோடு, சாதியைக் காரணம் காட்டி கருவை கலைத்ததாக, இளைஞரையும், போலி மருத்துவர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார். எலக்ட்ரீசியனான இவருக்கு, டிக் டாக் மூலம் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வர, ஒரு கட்டத்தில் சாந்தகுமாரின் காதல் வலையில் சிக்கினார் சிறுமி.
இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, வேலூரில் உள்ள தீர்த்தகிரி முருகன் கோயிலில், சட்டத்தை மீறி திருமணம் செய்து கொண்டனர். அக்ராவரம் பகுதியில் தனி வீட்டில் இருவரும் வசித்து வந்த நிலையில், கடந்த மாதம் சிறுமி கர்ப்பமானார். இந்த செய்தியை தனது தந்தையிடம் தெரிவிக்குமாறு சிறுமி கூற, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னையில், சிறுமி பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் என அறிந்துக்கொண்ட சாந்தகுமார், அவருடன் வாழ பிடிக்கவில்லை என, தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சாந்தகுமார் வசித்து வந்த வீட்டிற்குச் சென்ற அவரது தாய் வளர்மதி, சித்தி ஐந்தாமரை, தாய் மாமன் செல்வராஜ் ஆகியோர், சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, தாமரைப்பாக்கத்தில் உள்ள போலி மருத்துவரான பாஷா என்பவரிடம் கருக்கலைப்பு செய்தனர். அதோடு நிற்காமல், சிறுமியை வீட்டை விட்டு அவர்கள் துரத்த, அனாதையாக நடுரோட்டில் நின்றுள்ளார் சிறுமி..
பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமையை CHILD HELP LINE-ல் சிறுமி தெரிவிக்க, அதிகாரிகள் அவரை மீட்டு, உரிய சிகிச்சை அளித்தனர். இது குறித்து ராணிப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அவர்கள், சிறுமியை ஏமாற்றிய சாந்தகுமார், குடும்பத்தார் மற்றும் கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் பாஷாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நம்பிய காதலன் துரோகம் செய்ய, எங்கு செல்வது என்று தெரியாமல் பதறிக்கொண்டிருந்த சிறுமியை, அவரது பெற்றோரே ஏற்றுக்கொண்டு, வீட்டிற்கு அழைத்து சென்றனர்.