நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபட்ட பாமக நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம் அருகே உள்ள ரங்கனூரை சேர்ந்த சுரேஷ் என்கிற மணிமாறன், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பாமக துணை செயலாளராக இருந்தார். உள்ளாட்சித் தேர்தலில், இலந்தகுட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சந்தோஷ் என்பவருக்கு வாக்குகள் சேகரிக்கும் பணியில் கடந்த 10 நாட்களாக மணிமாறன் ஈடுபட்டுள்ளார். தேர்தலின் போது மணிமாறனுக்கும், அப்பகுதியில் உள்ள சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், புதுப்பாளையத்தில் உள்ள கல்குவாரியில் மணிமாறன் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிபாளையம் காவல்துறையினர், மணிமாறனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேர்தல் முன் விரோதம் காரணமாக மணிமாறன் கொலை செய்யப்பட்டாரா..? என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.