பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெறவுள்ள அரசு விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மேடை, மைதான ஏற்பாடுகளை கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, மோடியின் திருப்பூர் வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையும் என்றார். தமிழகத்தில் நேர்மறையான அரசியலை பாஜக எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார். விவசாயிகள், ஏழைகள் ஆகியோர் மீது அக்கறை கொண்டு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், பாஜக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறது என்பது குறித்து காங்கிரஸ் கவலைப்பட தேவை இல்லை என்றும் தமிழகத்தில் பாஜக பலம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.