இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
இந்தியா- ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு ரஷ்யாவின் விளாடிவோஸ்டக் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்பட்டு சென்ற பிரதமர் மோடிக்கு விலாடிவோஸ்டக் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முப்படை வீரர்களின் அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்றார்.
பின்னர், விளாடிவோஸ்டக் நகரில் அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இருதரப்பு மற்றும் சர்வதேசப் பிரச்சனைகள் குறித்து பேசுகின்றனர். இரு நாடுகளின் அரசியல் ரீதியான உறவு குறித்தும் பாதுகாப்பு, வர்த்தகம், அணுசக்தி குறித்தும் அப்போது ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் மேலும் 6 அணுமின் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா -ரஷ்யா இடையே 25 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியுடன் 50 பேர் கொண்ட தொழிலதிபர்கள் குழுவும் ரஷ்யாவுக்கு சென்றுள்ளது. இக்குழுவுக்கும் ரஷ்ய நிறுவனங்களுக்கும் இடையே குறைந்தது பத்து வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.