தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய எம்.பிக்கள் மிகுந்த துடிப்புடன் செயல்படுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
17வது மக்களவை முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. மக்களவை இடைக்கால சபாநாயகராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட வீரேந்திரகுமார், முதலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் எம்.பிக்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக புதிய எம்.பிக்களுக்கு வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இன்றும் நாளையும் நடைபெறும் இந்த பதவியேற்கும் நிகழ்வில், 542 எம்பிக்கள் பதவியேற்பர். இதையடுத்து வரும் 19-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்வு செய்யப்படவுள்ளார். அதன்பின், வரும் 20 ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தவுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் 17-வது மக்களவை தேர்தலில் தான் அதிக பெண்கள் வாக்களித்திருப்பதாகவும், தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய எம்.பிக்கள் மிகுந்த துடிப்புடன் செயல்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.