வழக்கு நிலுவையில் இருப்பதால் ராமர் கோவில் கட்டும் அவசர சட்டம் இயற்ற இயலாது: பிரதமர் மோடி

ராமர் கோவில் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ராமர் கோவில் கட்டும் அவசர சட்டம் இயற்ற இயலாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் கட்டுவதற்கு அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும் என பல்வேறு இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். வழக்குகள் முடிவடைந்த பின்னரே ராமர் கோவில் கட்டுவது தொடர்பான அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ரிசரவ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து, உர்ஜித் படேல் விலகியதில் அரசியல் நிர்பந்தம் இல்லை என்றும், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஆறேழு மாதங்களுக்கு முன்பாகவே உர்ஜித் படேல் தன்னிடம் கூறியதாகவும் மோடி தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான துல்லியத் தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை என பெருமிதம் தெரிவித்த மோடி, ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காகவே, துல்லியத் தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் விளக்கமளித்தார். வரவுள்ள மக்களவை தேர்தல், மக்களுக்கும், மெகா கூட்டணிக்கும் இடையேயான போராக இருக்கும் என்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து அவர் விமர்சித்தார்.

Exit mobile version