ராணுவ வீரர்களுக்கு 3 புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளது என தேசிய போர் நினைவக திறப்பு விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி இந்தியா கேட் அருகேயுள்ள சுமார் 40 ஏக்கர் பரப்பளவில், தேசிய போர் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த தேசிய போர் நினைவகத்தில், சுதந்திரம் அடைந்தது முதல், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில், 25 ஆயிரத்து 942 வீரர்களின் பெயர்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தின் 4 விதமான முக்கியத்துவங்களை குறிக்கும் வகையில், மைய மண்டபம் 4 சக்கரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மற்றொரு சக்கரத்தின் மீது, அணையா விளக்கு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 15.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த அணையா விளக்கு, தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இது புதிய இந்தியா என்றும், இந்தியா புதிய பாதையில் பயணித்து முன்னேறி வருவதாகவும் கூறினார். ராணுவ வீரர்களுக்கு 3 புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளது என்று கூறிய அவர், வீரர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், நாடு ஆரோக்கியமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
பெண்களை போர் விமானிகளாக்க வாய்ப்பு வழங்கி உள்ளதாகவும், பெண் வீரர்களுக்கும், ஆண் வீரர்களுக்கு சமமான ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.