அனைத்து பிரச்சனைகள் மீது விவாதம் நடத்த தயார்: பிரதமர் மோடி

பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்தழைப்பு தருமாறு வலியுறுத்திய பிரதமர் மோடி, அனைத்து பிரச்சனைகள் மீது விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

2020-2021ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி, இன்று முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனிடையே, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

அப்போது பேசிய மோடி, பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்தழைப்பு தருமாறு அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் கேட்டுக் கொண்டார். மேலும், எதிர்கட்சிகளின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறிய பிரதமர், அனைத்து பிரச்சனைகள் மீது விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், மாநிலங்களவையின் அனைத்துக் கட்சிக் கூட்டம், குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் இன்று நடைபெறுகிறது.

இதே போல், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தும் வகையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில், அனைத்துக் கட்சிகளின் பிரதிந்திகளும் கலந்துக் கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்தழைப்பு தருமாறு அனைத்துக் கட்சி பிரநிதிகளிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

Exit mobile version