சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் துணை ராணுவப்படையினர் 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்திற்கு உட்பட்ட மின்பா வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. இந்த சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 17 வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த வீரர்களின் ஆயுதங்களையும் மாவோயிஸ்டுகள் எடுத்துச் சென்றுள்ளனர். 10க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 25 துணை ராணுவப் படையினர் உயிரிழந்தனர். அதன்பின்னர் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.