காலையில் கோவளம் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்குக் கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் பாட்டில், பைகள் ஆகியவவற்றைப் பொறுமையாகச் சேகரித்து அப்புறப்படுத்தினார்.
தமிழகத்துக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்றுச் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இணைந்து மாமல்லபுரத்தில் உள்ள பழைமையான கலைச்சின்னங்களைப் பார்வையிட்டார். அதன்பின் கடற்கரைக் கோவில் அருகே சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார்.
நேற்றிரவு கோவளம் விடுதியில் தங்கியிருந்த பிரதமர் இன்று காலையில் அங்குள்ள கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்குச் சென்றார். அப்போது கடற்கரையில் எழிலைக் கண்டுகளித்ததுடன், கடற்கரை மணலில் கிடந்த பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றைப் பொறுமையாகச் சேகரித்தார். சுமார் அரைமணி நேரம் இவ்வாறு துப்புரவுப் பணி மேற்கொண்டார்.
அதன் பின் தான் சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகளை விடுதி ஊழியர் ஜெயராஜிடம் ஒப்படைத்ததுடன், பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதேபோல் உடலை நலமாகவும் கட்டுறுதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.