சிறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம்: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி உத்திர பிரதேசத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.

5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த தொகை தலா 2 ஆயிரம் வீதம் 3 தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தில் பயன் அடையும் விவசாயிகளை கணக்கெடுக்கும் பணி நடந்து வந்தது. இதையடுத்து முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் இத்திட்டத்தை இன்று மதியம் 12.30 மணிக்கு உத்திர பிரதேச மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

Exit mobile version