சேலத்தில் பசுமைக் காவல் நிலையங்களை உருவாக்கும் திட்டம் தொடக்கம்

சேலத்தில் பசுமைக் காவல் நிலையங்களை உருவாக்கும் தமிழக அரசின் திட்டத்தை மாநகரக் காவல் ஆணையர் செந்தில்குமார் தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் வறட்சியின் தாக்கத்தை எதிர்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மரங்களை நடவும், மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பை ஏற்படுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரக் காவல்துறை சார்பில் பசுமைக் காவல் நிலையம் அமைக்கும் திட்டத்தை மாநகரக் காவல் ஆணையர் செந்தில்குமார் தொடக்கி வைத்தார். சேலம் நெத்திமேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேங்கை, மா, நெல்லி, நீர்மருது, நாவல், மகிழம் உள்ளிட்ட 20 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்றுகளுக்குச் சொட்டுநீர்ப் பாசன முறையில் தண்ணீர் விடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் தங்கதுரை மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

Exit mobile version