கேரளாவின் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவத்திடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, மாநிலத்தில் இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு போடப்பட்டது.
மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை நடை திறக்கப்பட்ட நிலையில், கடந்த வாரத்தில் இரண்டு பெண்கள் அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தனர். இதனால் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மாநில ஆளுநர் சதாசிவத்திற்கு உத்தரவிட்டது.
தொடர்ந்து சட்டம் ஒழுங்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் சதாசிவம் கடந்த 3ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவத்திடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.