சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவு நேர சுற்றுலாவுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
விலங்குகளின் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இரவு நேரத்தில் சிங்கம், புலி, குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் செயல்பாடுகளை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் இரவு நேர உலா செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, அகில இந்திய அளவிலான குதிரை ஏற்ற போட்டியில் வெற்றி பெற்ற சென்னை காவல்துறை குதிரை படையினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஹரியானா மாநிலத்தில் 38-வது அகில இந்திய அளவிலான குதிரையேற்ற போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காவல்துறை முதன்முறையாக கலந்து கொண்டு கோப்பை, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பரிசுகளை வென்றது. வெற்றி பெற்ற பரிசுகளுடன் காவல்துறையினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.