கனமழையால் பாலருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் தமிழக -கேரள எல்லையில், அமைந்துள்ள ஆரியங்காவில் உள்ள பாலருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதேபோல், கேரள இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம் போடியில் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைப் பிள்ளையார் தடுப்பணை நீர் வீழ்ச்சியில் தண்ணீர் அருவி போல கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், நீர்வீழ்ச்சியை பார்வையிடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் அருவியில் யாரும் குளிக்காமல் தடுக்க போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் போடி சுற்றி உள்ள ஏரிகள் குளங்கள் கம்மாய் நிறையும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த தேவாலாவையொட்டி உள்ள வாழமூலா பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த இருநாட்களாக பெய்த கனமழையால் அங்குள்ள தரைப்பாலம் உடைந்துள்ளது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மரப்பாலம் அடுத்த புளிம்பாரை பகுதியில் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து மக்கள் சாலையைக் கடப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version