சமூக வலைதளங்களில் வைரலாகும் 1,400 ஆண்டு பழமையான கின்கோ மரம்!

தங்க நிற இலைகளால் 1400 ஆண்டுகளைக் கடந்தும் சுற்றுலாப்பயணிகளை தன்வசம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது கின்கோ மரம். சமூக வலைதளங்களில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது இந்த மரத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

சீனாவின் ஸோங்னன் மலைத்தொடரில் உள்ள கு குவானின் மலைத்தொடரில் உள்ள புத்தமத கோவிலுக்குள் இருக்கிறது இந்த மரம். அந்த பகுதியில் தற்போது இலையுதிர் காலம் தொடங்கியிருப்பதையொட்டி தங்க நிறத்திலான இந்த மரத்தின் இலைகள் அப்பகுதி முழுவதும் கொட்டிக்கிடக்கிறது. தூரத்திலிருந்து பார்க்கும் போது, காண்போரை பரவசப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது இம்மரம். இம்மரத்தின் இலைகள் மரத்தைச் சுற்றி கொட்டிக்கிடப்பதைப் பார்த்து இதை ’தங்கக்கடல்’ என்று வர்ணிக்கின்றனர் சமூக வலைதளவாசிகள்.

618ம் ஆண்டு முதல் 907ம் ஆண்டு வரை சீனாவை ஆண்டு வந்த டாங் வம்சாவளியைச் சேர்ந்த பேரரசர் டைஸாங் அல்லது இரண்டாம் பேரரசர் லி ஷிமினால் இந்த மரம் நடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த மரம் உணவுப்பொருளாகவும், பாரம்பரிய மருத்துவப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஹான் ஃபெய் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்திருக்கும் தற்போதைய கின்கோ மரத்தின் புகைப்படத்தை காய்(Khai) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பொதுமக்கள் முடங்கியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள கின்கோ மரத்தின் புகைப்படத்தால் இதனைக் காண்பதற்காக சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version