குடும்ப பாரத்தை தோளில் சுமக்கிறேன் என்று பொதுவாக கூறுவதுண்டு. உண்மையிலேயே பாரம் தூக்கி குடும்பத்தை காப்பாற்றும் ஒரு தொழிலாளி பற்றியே தொகுப்பே இது. உலக உழைப்பாளர்கள் தினத்தில் நாம் பார்க்க வேண்டிய மனிதர்களின் உலகிற்குள் அடியெடுத்து வைப்போம் வாருங்கள்..
இவர் பிரபாகர்.கோயம்பேட்டில் உள்ள பலநூறு சுமைதூக்கும் தொழிலாளிகளில் இவரும் ஒருவர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் காய்கறி உள்ளிட்டவற்றை சரக்கு லாரிகளில் ஏற்றி இறக்குவது தான் இவரது வேலை. அதிகாலை 2 மணிக்கு துவங்குகிறது இவரது பணி. ஒரு மூட்டைக்கு 7 ரூபாய். உடல் ஒத்துழைக்கும் வரை சுமை தூக்கினால் கிடைக்கும் கூலி தான் அவரது அன்றைய வருமானம்.
இவரது சொற்ப சம்பளத்தை நம்பியே, அவருடைய பெரிய குடும்பம் காத்திருக்கிறது. தான் மூட்டை தூக்கினாலும் தன்னுடைய இரண்டு பிள்ளைகளை நல்ல முறையில் படித்து ஆளாக்க வேண்டும் என்பதே இவரது கனவு.
மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு தங்குமிடம், குளியல், கழிப்பிட வசதி போன்றவை ஏதுமில்லை. பொதுக் கழிப்பறைகளையே இவர்கள் பயன்படுத்த நேரிடுகிறது. அதற்கு அவர்களது கூலியில் பாதி தொகை செலவாகிறது. அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் தொகையை குடும்பத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என்பது இவர்களது ஆதங்கம்.
பாரத தேசம் முழுவதும் பல கோடி பிரபாகர்கள் உழைப்பை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு தொழிலாளிக்கும் காதல், ஆசை, கனவு, தேவை என்று, பல உணர்வுகள் உண்டு. ஆனால், குடும்பத் தேவையும், கடமை உணர்ச்சியும், அவர்களுடைய உணர்வுகளை புதைத்து விடுகின்றன. நாடு முழுவதும் உள்ள அத்துணை தொழிலாளர்களும், எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும் என்று கூறி, கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளை சமர்பிப்போம்.