தீபாவளி கொண்டாட்டங்கள் முடிவடைந்து அதிகளவிலான மக்கள் சென்னை திரும்பி வருவதால், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது.
தீபாவளியையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதற்கென, எராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை வருவதற்கு அதிகளவில் சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்துதுறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தென்மாவட்ட ரயில் நிலையங்களில் நேற்றும் இன்றும் மக்கள் வெள்ளம் அதிகளவில் காணப்பட்டது. முன்பதிவில்லாத ரயில்களில் நான்கு மடங்குக்கும் அதிகமான மக்கள் பயணித்ததால் பயங்கர நெரிசல் காணப்பட்டது. இதையடுத்து கூடுதல் பெட்டிகளை இணைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோன்று பேருந்து நிலையங்களிலும் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதனால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் இன்று காலை ஒருமணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீபாவளிக்கு அரசு பேருந்துகளில் மட்டும் 7.5 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில், அனைவரும் சென்னை திரும்பி வருவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.