சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சோயப் மாலிக் ஓய்வு

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் சோயப் மாலிக் அறிவித்துள்ளார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான சோயப் மாலிக், தனது 20 ஆண்டு கிரிக்கெட் வாழ்கைக்கு ஓய்வு கொடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில் நேற்று நடைப்பெற்ற வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியுடன் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்த குடும்பத்தினர், சக வீரர்கள், பயிற்சியாளர், பத்திரிகையாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இனி தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க விரும்புவதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் சோயப் மாலிக் தெரிவித்துள்ளார்.

இதுவரை 287 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மாலிக், 7,534 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 9 சதங்களும், 44 அரை சதங்களும் அடங்கும். ஆல் ரவுண்டரான மாலிக் 158 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மாலிக்கின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவரது மனைவியும், இந்திய டென்னிஸ் வீரருமான சானியா மிர்சா, 20 ஆண்டுகளாக உங்களது நாட்டுக்காக கவுரத்துடனும், கண்ணியத்துடன் விளையாடி உள்ளீர்கள். உங்களின் சாதனைகளை மிகவும் பெருமையாக குடும்பத்தினர் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version