சிவகங்கையில் இயற்கையாக கிடைக்கும் பயிர்களை கொண்டு பல்வேறு கண்கவரும் ஓவியத்தை உருவாக்கி வருகிறார் சிவகங்கையைச் சேர்ந்த பெண். அதைப்பற்றிய செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
தாஜ்மஹால்,ஈபிள் டவர், காடுகள்,பூங்கொத்துகள் என அனைத்தும் இயற்கையாக கிடைக்கும் நெல்,புல் மற்றும் தானியங்களை கொண்டு உருவாக்கி கண்களுக்கு விருந்தாக படைத்து வருகிறார் சிவகங்கையைச் சேர்ந்த அனிதா கிறிஸ்டி.
கடவுளின் இயற்கை ஓவியக் கலையை வளர்க்கும் நோக்கில் எவ்வித ஆடம்பர பொருளையோ அல்லது கெமிக்கலையோ பயன்படுத்தாமல் இயற்கையாகவே கிடைப்பவற்றை கொண்டு தத்ரூபமாக வரைந்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் அனிதா.
சிவகங்கை நகர் மஜித் ரோட்டில் வாழும் பெண்மணி அனிதா கிறிஸ்டி கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நேச்சுரல் ஆர்ட் வரைவதில் ஆர்வம் கொண்டுள்ளார். வயலில் விளையும் நெல் காடுகளில் வளர்ந்துள்ள லேசான புற்களை நோட்டு புத்தகம் பேப்பர்களில் பதப்படுத்தி தேவைக்கேற்ற கலர் சார்ட் பேப்பரில் ஒட்டி அதற்குமேல் கலர் ஜிகினா கலை ஒட்டினால் அழகு படம் தயாராகும் என எளிதாக கூறுகிறார் அனிதா.
`இதுவரை 500க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளதாக கூறும் அனிதா, இந்த ஓவியங்கள் வரைவது மனதிற்கு அமைதியை கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் பெண்கள் இவ்வகையான கலைகளை கற்றுக் கொண்டு செயல்படுத்துவதன் மூலம் தன்னம்பிக்கை மற்றும் பொருளாதாரம் மேம்படும் எனவும் கூறுகிறார் அனிதா.