மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி ; அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியரின் சேவை

மாணவர்களுக்கு இலவசமாக ஓவியம் வரைய சொல்லிக் கொடுப்பதுடன், கொரோனா வைரஸ் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ஓவிய ஆசிரியர் ஒருவர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த தர்மராஜ், கன்னிவாடி அடுத்த கோணூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், இந்த நாட்களை மாணவர்களுக்கு பயனுள்ளதாக மாற்ற முடிவு செய்தார். மாணவர்கள் புத்துணர்ச்சி பெறும் வகையில் ஓவியம் வரைய கற்றுக் கொடுத்து வரும் தர்மராஜ், கொரோனா வைரஸ் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக சோப்பு போட்டு கையை கழுவுதல், பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், நோய் தடுப்பு முன்கள பணியாளர்களின் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அதை ஓவியமாகவும் வரைய கற்றுக் கொடுத்து வருகிறார் தர்மராஜ். பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டில் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர் தர்மராஜிடம் ஓவியப் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் மாணவர்களின் கற்பனை திறன்களுக்கு, ஓவியம் வடிவிலும் அவர் உயிர் கொடுத்து வருகிறார். கொரோனா விழிப்புணர்வு சித்திரங்களை மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருவதாகவும், மாணவர்களும் ஓவியத்தை ஆர்வமுடன் கற்று வருவதாகவும் கூறுகிறார் ஆசிரியர் தர்மராஜ். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது குறித்த பல்வேறு வழிமுறைகளை அறிந்து கொண்டதாகவும், ஓவியமும் வரைய கற்றுக் கொண்டதாகவும் மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மாணவர்களுக்கு இலவசமாக ஓவியம் கற்றுக் கொடுப்பதுடன், கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவிய ஆசிரியரின் முயற்சி மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

Exit mobile version