திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இரண்டு அர்ச்சகர்கள் உட்பட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, வரும் 15ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட பத்மநாபசுவாமி கோயில், கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து, பக்தர்கள் பாதுகாப்பான இடைவெளியுடன் தரிசனம் செய்யும் வகையில், பல்வேறு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.
மேலும், நாளொன்றுக்கு 665 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் உள்பட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, வரும் 15ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.