சபரிமலையில் கடந்த ஆண்டை விட பக்தர்களின் கூட்டம் இருமடங்கு அதிகரிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இருமடங்கு அதிகரித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என அளித்த தீர்ப்பைச் சீராய்வு செய்யக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இதையடுத்து 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களை சபரிமலைக்கு அனுமதிப்பதில்லை எனக் கேரள அரசும் முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த சனிக்கிழமை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதற்காக இணையத்தளத்தில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் முந்நூற்றுக்கு மேற்பட்டோர் ஏற்கெனவே முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் வந்தால் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்புவதற்காக நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

முதல் இரண்டு நாட்களில் மட்டும் சபரிமலைக்கு 70 ஆயிரம் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். முதல் நாளில் மட்டும் காணிக்கை மூலம் 3 கோடியே 13 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பக்தர்களின் வருகை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

Exit mobile version