ஆம்பூர் அருகே தமிழக-ஆந்திர எல்லையில் மலைப் பகுதியில் இளம்பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் சுட்டகுண்டா பகுதியில் வசித்து வந்த ரேவதி பெங்களூரில் உள்ள தனது கணவரிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்ததால், சிக்னல் தேடி அங்குள்ள மலைப்பகுதிக்குச் சென்றார். நெடுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடி அலைந்த போது, மலைப்பகுதியில் ரேவதி தலையில் அடிப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மர்மக் கும்பல் ஒன்று ரேவதி அணிந்திருந்த 10 சவரன் நகைக்காக அவரைக் கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதற்கிடையில், சம்பவம் நடைபெற்ற அன்று, ரேவதி கரடிக்குடியைச் சேர்ந்த ஜெய்குமார் என்பவருடன் செல்போனில் பேசி வந்ததாகவும், ஜெய்குமாருக்கும், ரேவதியின் சித்தியான சித்ராவுக்கும் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ரேவதியின் சித்தி சித்ராவிற்கும் இக்கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.