திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சிற்றுந்து ஓட்டுநர்களுக்கிடையே யார் முன்னால் செல்வது என ஏற்பட்ட போட்டியில் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வளையப் பாளையத்திலிருந்து பல்லடம் நோக்கி வந்த சிற்றுந்து, பல்லடத்தில் இருந்து தொட்டம்பட்டி நோக்கிச் சென்ற சிற்றுந்து ஆகியவை நல்ல கவுண்டம்பாளையம் என்னும் இடத்தில் வந்தபோது யார் முதலில் செல்வது எனப் போட்டி ஏற்பட்டுள்ளது. குறுகிய சாலை என்பதால் முந்த முயன்ற ஒரு சிற்றுந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 30க்கு மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்த பயணிகள் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டுநர் குடித்து விட்டு வாகனத்தை இயக்கியதாலும், ஓட்டுநர்களுக்கிடையே போட்டி காரணமாகவும் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.