94 வயதிலும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய மூதாட்டி

27 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில், வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் முதியோர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியத்தில் 14 கிராம ஊராட்சிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.  வாக்காளர்கள் காலையில் இருந்தே ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்நிலையில் ஆலம்பாளையம் வாக்குச்சாவடியில் நஞ்சம்மாள் என்ற மூதாட்டி 94 வயதிலும் தனது பேரனின் உதவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 104 வயது முதியவர் ஒருவர் வாக்களித்தார். ஊன்று கோலுடன் வந்த முதியவருக்கு அங்கிருந்த பொதுமக்கள், அவர் நல்ல முறையில் வாக்களிக்க உதவி செய்தனர். முதியவரின் ஜனநாயக கடமை உணர்வு, அப்பகுதி இளைஞர்களுக்கு, தாங்களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை வழங்கியது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த மேல் புளியங்குடியில் நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில், தையல்நாயகி என்ற 110 வயதை எட்டிய மூதாட்டி வாக்களித்துத் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். தான் இதுவரை எந்தத் தேர்தலிலும் வாக்களிக்கத் தவறியதில்லை எனக் கூறிய அவர், வாக்களிப்பது அனைவரின் கடமை என அறிவுரை வழங்கினார்.

Exit mobile version