பீகார் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக #gobackstalin ட்விட்டரில் டிரெண்ட் ஆனது குறித்தும், தமிழகத்தையே ஆட்சி செய்ய தெரியாத ஸ்டாலின் தேசிய அரசியல் கனவு காண்கிறாரா என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
உள்ளூர் மக்களெல்லாம் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்க, அதற்கே ஒன்றும் செய்ய முடியாமல், தன் பலத்தைக் காட்ட வெளியூருக்கு கிளம்பினார் விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின். பீகார் மண்ணில் கால்வைக்க வந்தவரை வரவேற்கும் விதமாக டிவிட்டரில் “கோ பேக் ஸ்டாலின்” என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கி இருக்கின்றனர் பீகார் நெட்டிசன்கள்.
இது ஒருபுறம் இருக்க, நான் தேசிய அரசியலுக்கு போய்ட்டேன், நான் தேசிய அரசியலுக்கு போய்ட்டேன்… என்று வடிவேலு கணக்காக சொல்லிக்கொண்டிருந்த ஸ்டாலின் இன்று பத்தோடு பதினோன்றாக எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்திருக்கிறார்… குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதே குதிரைக்கொம்பாக இருக்கும் சூழலில், பீகாரில் தன் பாச்சா பலிக்குமா என்று யோசித்துபார்க்க வேண்டாமா?
தமிழகத்தில் ஆட்சி நடத்த, இங்கு ஸ்டாலினுக்கே ஆலோசனை கொடுப்பதற்கு 38 குழுக்கள் இருக்க, தேசிய கட்சிகளுக்கு அவர் என்ன ஆலோசனைகளை வழங்கியிருப்பார்? சரி இருக்கட்டும், நம் முதல்வருக்கு காகிதத்தில் எழுதிக் கொடுத்திருப்பதை படிக்கும்போதே ஏகபோகமாக ரோல் ஆகும் நிலையில் இப்போது அங்கு போய் என்ன பேசியிருப்பார் என்ற கேள்வி எழுவது நியாயம் தானே?
இந்தக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எண்ணிய சந்திர சேகரராவே, இதில் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளுக்குள் ஆளுக்கொரு முரண் உள்ளது. முக்கியமாக மேற்குவங்கத்தில் மோதிக்கொள்ளும் திரிணாமூல் காங்கிரஸ் – இந்திய தேசிய காங்கிரஸ், டெல்லியில் முட்டிக்கொள்ளும் ஆம்ஆத்மி- காங்கிரஸ், கேரளாவில் கண்மூடித்தனமாக மோதிக்கொள்ளும் கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் என்று மாநிலங்களில் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகளோடு இருக்கும் கட்சிகள் எப்படி ஒன்றுசேரப்போகின்றன? இவற்றை ஸ்டாலின் எப்படி ஒன்றிணைக்கப்போகிறார்? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி…
நிலைமை இப்படி இருக்க, ஸ்டாலினுக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டதோ அல்லது, தமிழகத்தில் இனி தன் அரசியல் எடுபடாது என்பதால், தேசிய அரசியலுக்குபோய் பிஸிஆகிவிடலாம் என்று கனவில் இருக்கிறாரா ஸ்டாலின் என்ற சந்தேகங்களும் வலுக்கின்றன…
மேடைகளில் பீஹார் மக்களை பானி பூரி, வடக்கன்ஸ் என்று தரைக்குறைவாகப் பேசும் தன் கட்சிக்காரர்களை கண்டிக்கத்தெரியாத ஸ்டாலின் இன்று அரசியல் ஆதாயத்திற்காக அதே பீஹாரை நோக்கிச்சென்றிருப்பதுதான் நகைமுரனே.
ஆக, தமிழகத்திலேயே பலிக்காத ஸ்டாலினின் அரசியல் பாச்சாக்கள், தேசிய அரசியலில் பலிக்குமா? தானும் பிரதமர் என்று பகல் கனவு காணும் ஸ்டாலின் தன் உயரத்தை எப்போது உணர்வார்? எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்தின் மூலம் நிகழுமா மாற்றங்கள்?தமிழகத்தையே சரியாக ஆளத் தெரியாத முதல்வர் ஸ்டாலின் தேசிய அரசியலில் என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்விக்கு அவருக்கே பதில் தெரியாது என்பதுதான் இங்க ஹைலைட்டே.
Discussion about this post