அரசியல் ஈகோ காரணமாக, பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழா ஆளுநரால்தான் கிடப்பில் உள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியிருப்பதோடு, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை விடியா அரசு பாழக்குவது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்…
தமிழக ஆளுநராக 2021 செப்டம்பரில் ஆர்.என்.ரவி பதவியேற்றது முதலே திமுக, கவர்னருடனான முட்டல் மோதல் போக்கை தொடங்கி உள்ளது. வழக்கமாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும்போது கவர்னரை ஆரத்தழுவி வரவேற்கும் திமுக, அதுவே தான் ஆளும்கட்சியாகவும் மத்தியில் வேறு கட்சியாகவும் இருக்கும்போது ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்னும் கொள்கையை கைக் கொள்ளும்.
இப்போதும் அதே மனநிலையில் இருக்கும் திமுகவின் மக்கள் விரோத செயல்களுக்கும் தன்னிச்சைப் போக்குக்கும் கடிவாளம் போட்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதுதான் திமுகவை கடுப்பின் உச்சத்திற்கு கொண்டு போயுள்ளது. அதனால்தான் சட்டப்பேரவையில் ஆளுநரை வரவழைத்து அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது, பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் உள்ள கவர்னர்களுக்கு எதிராக அந்தந்த மாநில அரசை உசுப்பேத்துவது போன்ற வேலைகளைச் செய்துள்ளது. மாநில அரசின் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் என்று கொடிபிடிப்பதும் கவர்னரின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகவே உள்ளது.
அதன் தொடர்ச்சியாக இப்போது கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவிலும் ஆளுநருடன் மோதல் போக்கையே கடைப்பிடிக்கிறது.
அதிலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எப்போது சட்டப்பேரவையில் ஆளுநரைப் பார்த்து கைகளை நீட்டி அவமரியாதை செய்யும்படி உடல்மொழி காட்டினோரோ அப்போதிலிருந்து ஆளுநருக்கு எதிராகவே அத்தனை வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற துணைவேந்தவர்கள் மாநாட்டில் பொன்முடி பங்கேற்காததும் இதனால்தான்.
கொரோனா காலத்துக்குப் பின்னர் பெருவாரியான பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறாததால், தேர்வுகளில் தேர்ச்சி அடைந்த சுமார் 9லட்சத்து 29ஆயிரம் மாணவர்கள் பட்டத்துக்காக காத்துக் கிடக்கின்றனர். வெளிநாட்டில் சென்று மேற்கல்வியைத் தொடர டிகிரி சான்றிதழ் அவசியம் என்பதால் அது இதுவரை கிடைக்காமல் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆளுநர்தான் பட்டமளிப்பு விழாவுக்கு தேதி தராமல் இழுத்தடிப்பதாக பொன்முடி குற்றச்சாட்டு சொல்ல, ஆளுநர் தரப்பிலோ பட்டமளிப்பு விழாவுக்கு தேதி தரப்பட்டுள்ள விவரத்தை வெளியிட்டுள்ளனர்.
பட்டமளிப்பு விழா தொடர்பாக அமைச்சர் பொன்முடி ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பது அம்பலமாகி உள்ள நிலையில், விடியா ஆட்சியின் அரசியல் ஈகோவால் மாணாக்கர்களின் எதிர்காலம் பாழாவதாக ஆதங்கம் தெரிவிக்கின்றனர் கல்வியாளர்கள்.
– ஆசாத் மற்றும் வினோத் பச்சையப்பன்.
Discussion about this post