சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் மலைப் பாதைகளின் ஓரங்களில் புதிதாக அருவிகள் உருவாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதளமான ஏற்காட்டில் மழைக்காலம் என்பதால் பகல் நேரத்தில் குளுமையான வானிலையும்,இரவு நேரத்தில் கனமழையும் பெய்து வருகிறது. கடந்த ஒருவார காலமாக மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மலைப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கின்றது.
கனமழையால் தண்ணீர் செல்வதற்காக உள்ள நீர்வழித்தடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலைப்பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு சிறு ஓடைகளும், அதனால் பல இடங்களில் அருவிகளும் ஏற்பட்டுள்ளன. இதனால், ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
சேலம் நகர் பகுதியில் இருந்து செல்லும் பாதையிலும், அரூர் சாலையில் இருந்து குப்பனூர் செல்லும் சாலையிலும் இதுபோன்று ஏராளமான அருவிகள் உருவாகியுள்ளன.