போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் ஆம்புலன்ஸ் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை வடிவமைத்து மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
விபத்துக்களில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களையும், திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுபவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் ஆம்புலன்ஸ்கள் பேருதவியாக உள்ளன. சைரன் ஒலியுடன் ஆம்புலன்ஸ்கள் வரும் போது, சாலைகளில் இருபுறங்களிலும் வாகனங்கள் ஒதுங்கி வழிவிடுகின்றன. சிக்னல் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதிலும் இருந்தும் ஆம்புலன்ஸ்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் சென்னை போன்ற பெருநகரங்களில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல், இரைச்சலால் ஆம்புலன்ஸ்கள் வருவதை வாகன ஓட்டிகளால் அறிய முடியவதில்லை. இதனால் ஆம்புலன்ஸ்கள் விரைவாக மருத்துவமனைக்கு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த இரட்டை சகோதரர்களான பாலகுமாரும் பாலச்சந்தரும் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆம்புலன்சில் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தி அவற்றை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் வைக்கின்றனர். ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போது, ஜிபிஎஸ்யுடன் இணைக்கப்பட்ட கருவி இயங்கி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பும். கட்டுப்பாட்டு அறையில் இணைக்கப்பட்டுள்ள மற்றொரு கருவியானது, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கியை இயங்க வைத்து ஆம்புலன்ஸ் வருவது குறித்த அறிவிப்பை வெளியிடும்.
சாலை விபத்தில் காயமடைந்த தனது தந்தையை, உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாததால் இறந்ததாக குறிப்பிட்டுள்ள மாணவர்கள், அவரின் இழப்பே புதிய கருவியை கண்டுபிடிக்க தூண்டியதாகவும் தெரிவித்தனர். அரசு உதவி செய்தால் மாநிலம் இந்த சேவையை வழங்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டனர். இரட்டை சசோதரர்களின் கண்டுபிடிப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். சசோதரர்களின் கண்டுபிடிப்புகள் தொடரவும் வாழ்த்துக்கள் எனவும் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். நியூஸ் ஜெ செய்திகளுக்காக மதுரை மேலூரிலிருந்து காசிலிங்கம்