நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவி, தாயுடன் சிறையில் அடைப்பு

நீட் தேர்வு மோசடியில் கைதான மற்றொரு மாணவி பிரியங்கா மற்றும் அவரது தாய் மைனாவதி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னையைச் சேர்ந்த மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் மோசடி செய்தது முதலில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து நடத்திய விசாரணையில், மேலும் பல மாணவர்கள் நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்தநிலையில் நீட் முறைகேட்டுக்கு பிறகு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழை சரிபார்க்கும் பணியின் போது தர்மபுரியை சேர்ந்த மாணவி ஒருவர் சிக்கி உள்ளார். சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வந்த மாணவி பிரியங்கா, மதிப்பெண் சான்றிதழ்களை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் மாணவி பிரியங்காவை பிடித்து விசாரணை நடத்தியதில், தனது தாய் மைனாவதியுடன் சேர்ந்து மதிப்பெண்களை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மாணவி பிரியங்காவையும், தாய் மைனாவதியும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து, தேனிக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். பின்னர், இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்பு ஆஜர்படுத்தினர். இருவரையும் வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Exit mobile version