முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு ரயில் மூலம் நாகை செல்ல உள்ளதால் எழும்பூர் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட, இரண்டாம் கட்டமாக இன்று இரவு 10 மணிக்கு காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினம் செல்ல இருக்கிறார். அதனை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், சென்னை கோட்ட ரயில்வே எஸ்.பி. ரோகித் நாதன் ராஜகோபால் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் ஆர்.பி.எஃப் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். காரைக்கால் எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் ரயில் நிலையங்களில் முதல்வரை காண தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வருவார்கள் என்பதால் அந்த ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.