காவிரி நீர் கடைமடை வந்து சேர்வதற்குள் குடிமராமத்து பணிகளை இரவு பகலாக மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நாகை மாவட்டத்தில் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் குடிமராமத்து திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆட்சியர் சுரேஷ்குமார், நாகை மாவட்டத்தில் குடி மராமத்து பணிகளை மேற்கொள்ள 181 பணிகளுக்கு சுமார் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், பணிகளும் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார்.