ஐ.பி.எல். கிரிக்கெட் – 48 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது மும்பை

கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் 2020 தொடரின் 13வதுப் போட்டி, ஷேக் சையது மைதானத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. டாஸில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். டி-காக், ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே காட்ரல் பந்துவீச்சில் அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய ரோகித் 45 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 70 ரன்களை விளாசி அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய பொல்லார்ட், பாண்ட்யா ஆகியோர் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் அனுப்பினர்.

இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு, 191 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 20 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 47 ரன்களுடனும், 11 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 30 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பஞ்சாப் அணி தரப்பில் காட்ரல், சமி, கெளதம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது இன்னிங்க்ஸை தொடங்கியது. கேப்டன் ராகுல் நேற்றைய போட்டியில் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சதமடித்த மயங்க் அகர்வால் 25 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய பூரன் 44 ரன்களும், மேக்ஸ் வெல் 11 ரன்களும், கிருஷ்ணப்பா கெளதம் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 8 விக்கெட்களை இழந்த பஞ்சாப் அணியால், 20 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 48 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது. கிருஷ்ணப்பா கெளதம் 22 ரன்களுடனும், சமி 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல், கடைசிவரை களத்தில் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் பேட்டின்ஸன், பும்ரா, ராகுல் சாஹர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், போல்ட், க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

20 பந்துகளில் 47 ரன்கள் விளாசிய பொல்லார்டு ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்திலும், 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 2 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் சென்னை சூப்பர்கிங்ஸும் உள்ளது.

Exit mobile version