ஐபிஎல் 2019: சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

12-வது ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டில் மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த மும்பை, சென்னை, டெல்லி, ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுகளில் விளையாடின. இதில் டெல்லி, ஹைதரபாத் அணிகள் வெளியேறிய நிலையில், சென்னை, மும்பை அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அதன்படி ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மாவும், டி காக்கும் களமிறங்கினர். இருவரும் சீரான இடைவெளியில் வெளியேற, அதன்பின்னர் வந்த மற்ற வீரர்களும் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் 6-வது விக்கெட்க்கு களமிறங்கிய பொல்லார்டு நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் மும்பை அணி 149 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. பொல்லார்டு கடைசிவரை ஆட்டமிழக்காமல் 41 ரன்களை குவித்தார்.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சன் மற்றும் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்சன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். எதிர்முனையில் டு பிளிஸ்சிஸ் 26 ரன்னில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த மற்ற வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர் .

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19.4-வது பந்தில் அதிரடியாக நிலைத்து நின்று ஆடிய வாட்சன் 80 ரன்களை குவித்திருந்த நிலையில் மலிங்கா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைபட்ட நிலையில், தாக்கூர் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. ஆட்ட நாயகனாக ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டார். முதல் இடத்தை பிடித்த மும்பை அணிக்கு பரிசு தொகையாக 20 கோடி ரூபாயும், 2-வது இடம் பிடித்த சென்னை அணிக்கு 12.5 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.

 

Exit mobile version