ஐபிஎல் தொடரின் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக நுழைந்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாப் டு பிளிஸ்சிஸ் மற்றும் ஷேன் வாட்சன் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய ரெய்னாவும் வெளியேற சென்னை அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனைத் தொடர்ந்து வந்த முரளி விஜய் மற்றும் அம்பதி ராயுடு இருவரும் ஓரளவு நிதானமாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
இறுதிக்கட்டத்தில் கேப்டன் டோனியின் அதிரடியால் 20 ஓவரில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அம்பதி ராயுடு 37 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார்.
இதனையடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா மற்றும் டி காக் சொற்ப ரன்களில் வெளியேற அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 18.3 ஓவரில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 132 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி நேரடியாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.
நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் வரும் 10 ஆம் தேதி சென்னை அணி இரண்டாவது தகுதிச் சுற்றில் விளையாடவுள்ளது.