சேலத்தில், அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா சுற்றுச்சூழல் அரங்கை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
சேலம் மாநகராட்சி பகுதியில் தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை விளக்கும் வகையில், அம்மா சுற்றுச்சூழல் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதியில் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் மறு சீரமைக்கும் பணிகள் மற்றும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 3 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோட்டை சின்னச்சாமி நகர் பகுதியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.