குட்கா பான் மசாலா பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு குட்கா பொருட்களுக்கு தடை விதித்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிக்கை வெளியிட்டார். அதே போன்று, மத்திய அரசும், குட்கா பான் மசாலா பொருட்களுக்கு தடை விதிக்க, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவை, ஒவ்வொரு ஆண்டும் நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் குட்கா பான் மசாலா பொருட்களை உற்பத்தி செய்யவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்பதற்கான தடை உத்தரவை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு இந்தாண்டு மே மாதம் 23 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.