கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றிய போது, ”நவராத்திரி” திட்டத்தை அறிவித்தார். தீய சக்தியை அழிக்கும் நவராத்திரி தினத்தை சுட்டிக்காட்டி, கொரோனா வைரஸை அழிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்துள்ள 9 வேண்டுகோள்கள் என்னென்ன? தற்போது பார்க்கலாம்…
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும், முடிந்த வரை அனைத்து பணிகளையும் வீட்டில் இருந்தபடியே செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மூத்த குடிமக்கள், குறிப்பாக 60 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் இன்னும் சில வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும்,வரும் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைவரும் சுய ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, இது நாட்டுக்கு நாம் செய்யும் சேவை எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நாட்டு மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வரும் 22ம் தேதி மாலை 5 மணியளவில் வீட்டில் இருந்தபடியே கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் மோடி, மிகவும் அவசியமில்லாத அறுவை சிகிச்சைகளை ஒரு மாதம் ஒத்திவைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா வைரசால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர், மத்திய நிதியமைச்சர் தலைமையில் தனிக்குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.அதிகளவில் சம்பளம் பெறுபவர்கள் தங்கள் பணியாளர்களின் ஊதியத்தை நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, பணியாளர்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக அத்தியாவசிய பொருட்களை வாங்கி வீட்டில் குவிக்க வேண்டாம் என்றும், மருந்து உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளையும், உறுதி செய்யப்படாத தகவல்களையும் நம்ப வேண்டாம் என்றும் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.