தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சரமாரியாக தாக்கி பேசினார்.
வரும் 7-ம் தேதி தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், நிசாமாபாத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். கூட்டத்தில் பேசிய அவர், பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு தெலுங்கானா மாநிலம் கிடைத்துள்ளதாகவும் அதில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் செய்த சாதனைகள் தேர்தலின் முடிவில் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.
மக்களுக்கு எதுவும் செய்யாமல் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற விரும்புவது போல தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும், மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவும் அதையே விரும்புவதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும் அவர் தெரிவித்தார். பா.ஜ.க.வுடன் சேர்ந்த வளர்ச்சியடைந்த இந்தியாவையும் புது தெலுங்கானாவையும் மக்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.