சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது நிகழ்ந்த அமைச்சர்களின் உரைகள்

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சி கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் கூறியுள்ளனர்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பதிலுரையின் போது உரை நிகழ்த்திய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக ஆட்சி காலத்தில் தொடர்ச்சியாக மாநில மொத்த வரி வருவாய் சரிந்து கொண்டே வந்ததாக, தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டப்பேரவையில் கூறுகையில், மக்கள் தொகை பதிவேட்டின் மூலம் எந்த ஒரு இஸ்லாமியருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் வாக்கு வங்கிக்காக மக்களை திசை திருப்பும் எதிர்க்கட்சிகளின் திட்டம் எடுபடாது எனவும் கூறினார்.

இதேபோல், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், அரியலூரில் இந்தாண்டு இறுதிக்குள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்றும், இதற்காக நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை மதுரவாயல் மற்றும் பல்லாவரத்தில் விரைவில் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 60 நீதிமன்றங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பேரவையில் உரை நிகழ்த்திய மின்துறை அமைச்சர் தங்கமணி, செய்யூர் பகுதியில் அனல்மின் நிலையம் அமைக்க, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அந்த திட்டம் நிலுவையில் இருக்கிறது. மத்திய அரசுடன் ஆலோசித்து விரைவில் அனல்மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

அவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், சிறப்பு சாலை திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் சீரமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், 47 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்துக்கு அதிநவீன வசதிகள் கொண்ட 200 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட உள்ளது. மேலும், 108 ஆம்புலன்ஸ் வருகையை அறிந்து கொள்ளும் வகையில், பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறினார்.

Exit mobile version