பொங்கலையொட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது காளைக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தனது இல்லத்தில் சின்ன கொம்பன் என்ற காளையை வளர்த்து வருகிறார். இந்தக் காளையை ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைப்பதற்காக அவரே காளைக்குப் பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்து வருகிறார். தனது தோட்டத்தில் காளைக்கு மண்ணு குத்துதல் உள்ளிட்ட பயிற்சிகளை அவரே நேரடியாகக் கொடுத்து வருகிறார். இதற்கு முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கொம்பன் என்ற காளையை வளர்த்து வந்தார். பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்றுப் பல வெற்றிகளைப் பெற்ற கொம்பன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு களத்திலேயே வீரமரணம் அடைந்தது. அதன் நினைவாக வளர்த்து வரும் இந்தச் சின்னக் கொம்பன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.