ஆதிக்க வர்க்கத்தினர் தாக்கியதாக மாடுபிடி வீரர் வேதனை!

மாட்டுப் பொங்கல் தினத்தில் மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று அதிக மாடுகளைப் பிடித்து முதலிடம் பெற்று காரினை பரிசாகப் பெற்றிருக்கிறார் சின்னப்பட்டியை சேர்ந்த இளைஞர் தமிழரசு.

சிறுவயது முதலே காளைகளோடு பழகி வந்ததோடு, உறவினர்களோடு சேர்ந்து பயிற்சியும் மேற்கொண்டு வந்ததே இன்றைய வெற்றிக்கு அடிப்படையாக அமைந்ததாக பெருமிதம் தெரிவித்துள்ளார் கல்லூரி மாணவரான தமிழரசு.

மாடு பிடிப்பது என்பது வீரம் நிறைந்தது மட்டுமல்ல. ஆபத்தும் நிறைந்ததுதான். அதிக அளவில் மாடுபிடித்து வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு கார், பைக் என்று மட்டும் வழங்காமல் அரசு வேலை வாய்ப்பு வழங்கினால் அதிக அளவிலான மாடுபிடி வீரர்கள் வருவார்கள் என்கிறார் தமிழரசு.

ஜல்லிக்கட்டில் வெற்றி பெறுவது என்பது தனக்கும் தனது ஊருக்கும் உறவுகளுக்கும் பெருமையாக இருந்தாலும், அதன்பின்னணியில் வலியும் வேதனையும் மிகுந்திருப்பதாக அதிர்ச்சி அளிக்கிறார் தமிழரசு. ஜல்லிக்கட்டில் மாடுகளைப் பிடிப்பவர்களை மாட்டின் உரிமையாளர்கள் கயிறு கொண்டு தாக்குவதும், தனியாக வரவழைத்து தாக்குவது தொடர்வதாகவும் அவர் வேதனை தெரிவிக்கிறார். அதிகார வர்க்கத்தினர் தங்களின் மாடுகளைப் பிடித்த ஆத்திரத்தில் மாடுபிடி வீரர்களை தாக்குவதாக கல்லூரி மாணவர் தமிழரசு தெரிவித்துள்ளார்.

விடியா ஆட்சியில் சமத்துவம் நிலவுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் வெற்று விளம்பரம் செய்து வரும் நிலையில், மாடுபிடி வீரர்கள் ஆதிக்க வர்க்கத்தினரால் தாக்கப்படுவது, தமிழரசு அளித்த தகவல் மூலம் தற்போது அம்பலமாகி உள்ளது. இனியாவது விளம்பரத்துக்காக சமத்துவம் பேசுவதை நிறுத்தி ஜல்லிக்கட்டுக்கு கொடுக்கும் பாதுகாப்பை ஜல்லிக்கட்டு முடிந்த பின்னரும் மாடுபிடி வீரர்களுக்கு எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் அரசு கண்காணிக்க வேண்டும்.

Exit mobile version