அனல் மின் திட்டங்களுக்கு தேவையான நிலக்கரியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 2020-21ம் ஆண்டில் வட சென்னை, உப்பூர், உடன்குடி, எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகிய அனல் மின் திட்டங்களுக்கு நிலக்கரி தேவைப்படுகிறது. இந்தநிலையில், டெல்லி சென்றுள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினார்.
மழைக்காலம் தொடங்க இருப்பதால், அனல்மின் நிலையங்களில் 15 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பாக வைத்திருக்க நாள்தோறும் 20 ரயில்களில் நிலக்கரியை அனுப்புமாறு அமைச்சர் தங்கமணி கேட்டுக் கொண்டார்.
எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்த அவர், தமிழ்நாட்டிற்கு மத்திய மின் தொகுப்பிலிருந்து வரவேண்டிய 6 ஆயிரத்து 312 மெகாவாட்டில் தற்போது 3 ஆயிரத்து 376 மெகாவாட் மட்டுமே கிடைப்பதை சுட்டிக் காட்டினார். எனவே, தமிழகத்திற்கு முழுமையாக தொடர்ந்து மின்சாரம் வழங்குமாறு அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்தார்.