செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு ஆபத்தா? – ஜூலை 15-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த சிறப்பு நீதிமன்றம், ஜூலை 15ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, பதவியில் இருக்கும்போது போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பின்னர் எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை தீவிரப்படுத்திய மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 47 பேர் மீது ஏழாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதுதொடர்பான வழக்கு, கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தபோது சட்டப்பேரவையை காரணம் காட்டி செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை. இதே பாணியில், நேரில் ஆஜராவதில் இருந்து தொடர்ந்து விலக்கு அளிக்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதனை அதிரடியாக ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், ஜூலை 15ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை சூடுபிடிக்கும் நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்பதால், அவரது அமைச்சர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பண மோசடி தொடர்பான 3 வழக்குகளில், ஏற்கனவே ஒரு வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், மீதமுள்ள வழக்குகளும் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version