சாக்குபோக்கு தேவையில்லை – திமுக அமைச்சருக்கு பதிலடி கொடுத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சாக்கு போக்கு சொல்லாமல், நெல் கொள்முதலில் கவனம் செலுத்தி, விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும் என அதிமுக விவசாயப்பிரிவு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் இடையூறு இன்றி நெல் கொள்முதல் மேற்கொள்ளவும், நெல் மணிகள் தண்ணீரில் நனைந்து பாழாகாமல் கொள்முதலை விரைவுபடுத்தவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்ததை அதிமுக விவசாயி பிரிவு செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இடைத்தரகர்கள் இடையூறு பற்றியோ, நெல் கொள்முதல் செய்யப்படாமல் வாரக்கணக்கில் காத்திருப்பது பற்றியோ, மழையினால் நெல்மணிகள் முளைத்துவிடுவது பற்றியோ நேரடியாக பதிலளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செழித்துள்ளது என்பதை அமைச்சர் ஒத்துக்கொண்டதற்கு நன்றி தெரிவித்துள்ள, சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளே தமிழ்நாட்டில் விவசாயம் செழித்ததற்கு காரணம் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசின் சாதனைகளால் ஆண்டுக்கு 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், 2019-20ம் ஆண்டில் 32 லட்சத்து 41 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு மார்ச் வரை 30 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2020-21ம் ஆண்டுக்கான நெல் சாகுபடி உயர்ந்ததன் காரணமாக, 34 முதல் 35 லட்சம் மெட்ரிக் டன் வரை நெல் கொள்முதல் உயர வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியதைப் போன்று தி.மு.க.வினரின் இடையூறு இன்றி நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தியுள்ளார். நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தி, விவசாயிகள் சிந்திய வியர்வைக்கு உண்டான பலனை விரைந்து அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சாக்கு போக்கு செல்லாமல், நெல் கொள்முதலில் கவனம்செலுத்தி, பாடுபட்ட விவசாயிகளின் துயர் துடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version