போர் நடக்க வாய்ப்பில்லாத சூழ்நிலையில் ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை குறைத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளார். முதல் சேத்தி, இரண்டாம் சேத்தி, நெம்மேலி, மறவக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கிய பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், போர் நடக்க வாய்ப்பில்லாத சூழலில், ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் நிதியை குறைத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வடக்கு, தெற்கு என்று பாரபட்சம் இல்லாமல், தமிழகத்திற்கு நிவாரண நிதியை அள்ளி வழங்கி தமிழக மக்களை பாதிப்பிலிருந்து பிரதமர் காக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.