செயற்கையான குடிநீர் பஞ்சத்தை உருவாக்கி, அரசு மீது எதிர்க்கட்சிகள் பழி போட நினைப்பதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவஞானம், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவர்மன், சந்திர பிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முறைகேடாக மின் மோட்டர் பயன்படுத்தி தண்ணீர் திருடும் வீடுகளின் மின் மோட்டாரை பறிமுதல் செய்து, அவர்களின் தண்ணீர் இணைப்பை ரத்து செய்து, மீண்டும் இணைப்பு வழங்க 15 ஆயிரம் ரூபாய் வரை அபாரதம் விதிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.